வண்டலூர் அருகே மேல கோட்டையூரை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். பெருங்களத்தூர் பார்வதி நகரில் சீனிவாசனுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கு பட்டா கேட்டு, தாம்பரம் தாலுகா அலுவலகத்தில், கடந்த மாதம் மனு செய்தார்.

பலமுறை தாலுகா அலுவலகம் சென்றும், அவரது நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் வரவில்லை. இதைதொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் தாம்பரம் தாலுகா அலுவலகத்துக்கு சீனிவாசன் சென்றார்.

அப்போது அங்கிருந்து புரோக்கர் ஜெயபாலன் (27) என்பவர், சர்வேயரை ஸ்பெஷலாக கவனித்தால், உடனே பட்டா கிடைக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் சேகர் (26) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, நிளத்தை அளவீடு செய்யாமல், உடனே பட்டா தருகிறேன். அதற்கு ரூ.15 ஆயிரம் தரவேண்டும் என சேகர் கூறினார். இதில், இருவரும் நீண்ட நேரம் பேரம் பேசி ஒரு வழியாக ரூ.8 தருவதாக சீனிவாசன் கூறினார். அதற்கு சேகர் சம்மதித்தார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, நேற்று காலை சீனிவாசன் சேகரை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது, பணம் தயாராக இருக்கிறது. எங்கு வந்து தரவேண்டும் என கேட்டார். அதற்கு, மாலையில் அலுவலகத்தில் இருப்பேன். அங்கு வந்து பணத்தை கொடுத்தவுடன், பட்டாவை கையோடு கொண்டு செல்லலாம் என அவர் கூறினார்.

அதன்படி, நேற்று மாலை சீனிவாசன் தாம்பரம் தாலுகா அலுவலகம் சென்றார். அங்கிருந்த சேகர், சீனிவாசனிடம் பணம் வாங்கும்போது, மாறுவேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச லஞ்ச ஒழிப்பு போலீசார், சேகரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த ஜெயபாலனும் கைது செய்யப்பட்டார்.