நெடுஞ்சாலையோர மதுபானக் கடை வழக்கில் உச்சநீதிமன்றம் தளர்வு அளித்துள்ளது 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 1731 கடைகள் இன்று நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளன. 

அதிகரித்து வரும் சாலை விபத்தை கருத்தில் கொண்டு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும்  மதுபானக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வருவாயை பாதிக்கும் என்று கூறி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மேல்முறையீடு செய்தன. தமிழ்நாடு சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகில் ரோத்தகி 500 மீட்டர் தொலைவை குறைக்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து இறுதி வாதத்தின் போது பேசிய நீதிபதி மனித உயிர்கள் மதுக்கடைகளை விட உயர்ந்தது என்றும், வருவாயைப் பெருக்க மாநில அரசுகள் வேறு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்தச் சூழலில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது,  மதுக்கடைகளை அகற்ற கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் 500 மீட்டர் தொலைவை 220 மீட்டராக குறைப்பதாகக் கூறினார்.

 மக்கள் தொகை 20,000 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே 220 மீட்டர் தொலைவு என்ற தளர்வு பொருந்தும் என்றும் நெடுஞ்சாலைகளில் பார்வைக்கு புலப்படும் வகையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.