Sukesh bail rejected - The court dismissed the petition

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவில் இரு அணிகள் செயல்படுகின்றன. இதனால், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இதையொட்டி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை டிடிவி.தினகரன் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு இடை தரகராக செயல்பட்டவர் சுகேஷ் சந்திரா. இதனால், இவர்கள் 2 பேர் உள்பட 7 பேரை டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து டிடிவி.தினகரன், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இவரை தொடர்ந்து, சுகேஷும் ஜாமீன் கேட்டு, டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், சுகேஷுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், அவர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்த வழக்குகளை அவர் திசை திருப்ப முயற்சிக்கலாம் என தெரிகிறது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதே வழக்கில் சுகேஷ், ஏற்கனவே ஜாமீன் கோரி மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அவர் 2வது முறையாக மனு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.