நாமக்கல்

அரசு அறிவித்த ஆதார விலையை தரமறுக்கும் தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியதால் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் பதட்டத்துடன் காணப்பட்டது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமைத் தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி நல்லா கௌண்டர் பேசும்போது,‘தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவிக்கும் ஆதார விலையை வழங்குவது இல்லை. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,437 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளன. பள்ளிபாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலை ரூ.63 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தை வழங்காமல் நிலுவை வைத்து உள்ளது.

ஆலை நிர்வாகத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக பல முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விவசாயிகளுக்கு தர வேண்டிய டன்னுக்கு ரூ.1,200 நிலுவைத்தொகையில் ரூ.300 மட்டுமே தர முடியும் என்றும், இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டால் ஒரே தவணையில் வழங்குவதாகவும் கூறுகிறது.

இதனால் அரசு அறிவித்த ஆதார விலையை வழங்க மறுக்கும், தனியார் சர்க்கரை ஆலை மீது வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

அப்போது திடீரென அவர், தனியார் சர்க்கரை ஆலை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக விவசாயிகள் சிலரும் எழுந்து நின்று முழக்கம் எழுப்பியதால் சிறிது நேரம் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே விவாதம் நடந்தது. அதன் விவரம் பின்வருமாறு:

விவசாயிகள், "கொல்லிமலை அடிவாரத்தில் வரட்டாறு வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர்வாரி அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றதற்கு  ஆட்சியர் "ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

விவசாயிகள், "சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள வேளாண் குழுக்களுக்கு அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்"என்றதற்கு "மாவட்டத்தில் இதுவரை 56 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மானியம் அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை" என்றார் ஆட்சியர்.

விவசாயிகள், "பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் இழப்பீட்டு தொகை வந்துவிடும். ஆனால் 2016-ம் ஆண்டுக்கான இழப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை" என்றனர்.

அதற்கு வேளாண் இணை இயக்குனர் கந்தசாமி, "நெல் பயிருக்கு ரூ.1.17 கோடி இழப்பீடு பெறப்பட்டு ரூ.1.13 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டு விட்டது. பிற பயிர்களுக்கு ரூ.1.20 கோடி அளவுக்கு இழப்பீடு தேவை என பயிர்காப்பீட்டு நிறுவனத்திடம் கோரப்பட்டு உள்ளது. இந்த இழப்பீடு தொகையை பெற்றவுடன் பிற பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.

விவசாயிகள், "மேட்டுர் அணையில் இருந்து வெண்டிபாளையம் தடுப்பணைக்கு சுமார் 250 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள வாழை பயிரை காப்பாற்ற, 10 நாட்களுக்கு உயிர் தண்ணீராக திறந்துவிட வேண்டும்" என்று கேட்டனர்.

அதற்கு ஆட்சியர், "இப்போது குடிப்பதற்கே காவிரி நீரை நம்பி தான் இருக்கிறோம். குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியாத நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை" என்றார்.

விவசாயிகள், "நீரேற்று பாசன சங்கங்களுக்கு காவிரி ஆற்றில் பம்புசெட்டுகள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொள்வதற்கான அனுமதி காலம் ஜனவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. ஆனால் இப்போதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆற்றில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வெண்டிபாளையம் தடுப்பணையை கடந்து செல்வது இல்லை. இந்த நீரேற்று பாசன சங்கங்களுக்கான மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும்" என்று  கேட்டனர்.

அதற்கு ஆட்சியர், "நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் முழுமையாக ஆய்வு செய்து, ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பம்புசெட்டுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என்று சொன்னார்.