பெரம்பலூர்

தமிழக அரசு ஆலைக்கு கரும்பு வெட்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பெரம்பலூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று சர்க்கரை ஆலை அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கலந்தாய்வு கூட்டத்தின் முடிவெடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்திற்கு ஆலை தலைமை நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார்.

இதில், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியது:

“ஆலைக்கு கரும்பு வெட்டிய பாக்கித் தொகையை உடனே வழங்க வேண்டும். வெட்டிய கரும்புக்கு பாக்கித் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்றால் பெரம்பலூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும்.

கரும்புக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் வாங்கும்போது மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் தரும் கம்பெனிகளிடம் மட்டுமே வாங்க வேண்டும்.

கரும்பு விவசாயிகள் வங்கியில் வாங்கிய கரும்பு பயிர்க் கடனை உடனே கட்ட வங்கி அதிகாரிகளால் மிரட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

ஆலையை சரியாக இயக்கவில்லையெனில் ஆலைக்கு கரும்பு விவசாயிகள் வழங்கிய பங்குத் தொகையை திருப்பி வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் தலைமை கரும்பு அலுவலர் ரவி, தலைமை பொறியாளர் ராஜேந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஞானமுர்த்தி, ராஜேந்திரன், வரதராஜன், சீனிவாசன், முருகேசன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.