தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக சார்பில் ஜன.7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் 'நம்ம ஊரு பொங்கல்' கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜன.12-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று முன்னதாக தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை, விருதுநகரில் ஜன.12-ல் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அரசு நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை மண்டேலா நகரில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் மோடி பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது அறிவித்துள்ளார். அப்போது, அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அண்ணாமலை, ''அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து மாநில அரசுதான் கூற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் பிரதமருக்கு நிகழ்ந்திருக்கும் பாதுகாப்பு குறைபாடு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அலட்சியம்தான். பிரதமரையும், அவருடன் பயணித்தவர்களையும் பாதுகாப்பில்லா சூழலுக்கு பஞ்சாப் அரசு தள்ளியுள்ளது. சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்த ஓர் இடத்தில் பஞ்சாப்பின் காங்கிரஸ் அரசு பெரும் நாடகத்தை நிகழ்த்தியுள்ளது. இதை கண்டித்து தமிழகத்தில் பாஜக பல அமைதி வழி அறப்போராட்டங்கள், பேரணி, வாயில் கருப்புத் துணி கட்டிய போராட்டம் என அடுத்த ஒரு வாரத்தில் முன்னெடுக்க உள்ளோம். இவற்றுடன் பிரதமரின் உடல் நலன் நன்றாக இருக்க, மகளிர் அணி தலைமையில் மிருக்தஞ்சய ஜெபத்தை இன்றும் நாளையும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, புதுச்சேரியிலும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உறுதியாகவில்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜனவரி 12-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்த நிலையில், ''பிரதமரின் வருகை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை'' என்று ஆட்சியர் வல்லவன் விளக்கம் அளித்துள்ளார்.
