sudden pit in mount road
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் ஒரு மார்க்கமாகவும், சென்ட்ரலில் இருந்து எழும்பூர், திருமங்கலம், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையில் மற்றொரு மார்க்கமாகவும் நடைபெற்று வருகிறது.
அண்ணாசாலையில் சைதாப்பேட்டை முதல் சென்டிரல் வரையிலான 7.3 கி.மீ. தூர சுரங்கப்பாதை பணிகள் இரு பகுதியாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகே சாலையின் மையப்பகுதியில் திடீரென பள்ளம் விழுந்தது. அதில் இருந்து ரசாயன கலவை பீறிட்டு வெளியேறியது.
இந்த கலவை சாலை முழுவதும் கொட்டியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உடனடியாக போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீரமைத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு சிறிய ரக வாகனங்கள் மட்டும் சாலையின் ஓரமாக செல்ல அனுமதிக்கப்பட்டன. காலை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வேலைக்கு செல்வோர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.
இதையொட்டி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, கலவை வெளியேறிய பகுதியில் மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் தகடுகள் கொண்டு பள்ளத்தை சீர் செய்தனர். இதையடுத்து, கலவை கசிவு நின்றது.
இதைதொடர்ந்து நேற்று முழுவதும் பள்ளம் விழுந்த பகுதியை சீரமைக்கும் பணி நடந்தது. இன்று காலை பெரிய அளவிலான இரும்பு தகடுகளை கொண்டு அந்த பள்ளத்தை மூடி, சிமென்ட் கொண்டு பூசினர்.

இதனால், இன்றும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒயிட்ஸ் ரோட்டில் இருந்து, அண்ணா மேம்பாலம் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும் கடும் சிரமத்துடன் சென்று கொண்டு இருக்கின்றனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியின் சில மீட்டர் தூரத்தில் ஆயிரம் விளக்கு தர்காவும், சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
