தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டி வரும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் அறிவிப்புக்கு தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல் முருகன் தமிழகத்துக்குள் நுழைய முடியாது என எச்சரித்துள்ளார். 
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. 
தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை பொங்கல் பண்டிகையின் போது நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழினமே போராடி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


கடல் கடந்த தேசங்களில் எல்லாம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அந்த நாடுகளில் எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கியுள்ளனர்.
ஆனால் தம்மை ஜல்லிக்கட்டு ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் ஆட்சியை கலைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா துடித்து வருவது அப்பட்டமாக நாடே அறிந்த ஒன்று. தமிழகத்தில் நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு.
இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கலைப்போம் என சுப்பிரமணியன் சுவாமிகள் மூலமாக மத்திய பாஜக அரசு மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.