மருத்துவத்துக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாணவி ஒருவர் ரத்தத்தால் போஸ்டர் எழுதியுள்ளது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கியது.

இதற்கு, தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும், நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்காததால் பல மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவாகிப் போனது.

இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா ரத்தத்தைக் கொடு ஒரு போஸ்டர் எழுதியுள்ளார். அதில், கடந்த ஆண்டைப் போல மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒரு பொதுத்தேர்வு பொதுவான பாடத்திட்டத்தைக் கொண்டு நடத்தப்படாதது அநீதி என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா, இந்த போஸ்டரை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். இதேபோல், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் ஸ்டாலினைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் முதலமைச்சர் தலைமையில் சென்று பிரதமர் மோடியிடம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கூறினர். நீட் தேர்வை எதிர்த்து ஐஸ்வர்யா ரத்தத்தால் எழுதிய போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.