students struggling for farmers all over tamilnadu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடத்திய போராட்டம், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவுடன் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

அடுத்து, அண்மையில் நடந்த நெடுவாசல் மற்றும் வடகால் போராட்டமும் அதற்கு நிகராக பேசப்பட்டது.

தற்போது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டமும், அகில இந்திய அளவில் விவசாயிகளை சிந்திக்க வைத்துள்ளது.

இதுமட்டுமல்ல, சுயமரியாதை, மொழி, கலாச்சார உரிமை என ஆண்டாண்டு காலமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிப்பாய் கலக்கம் என்று ஒரு போராட்டத்தை தொடங்கி, இந்திய சுதந்திர போராட்டத்திற்கே பிள்ளையார் சுழி போட்ட பெருமையும் தமிழத்தையே சாரும்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம் என இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த, அனைத்துப் போராட்டத்தையும் தொடங்கி வைத்த பெருமை தமிழகத்திற்கே சொந்தமானது.

இந்நிலையில், இந்தியா என்பது, பழமையில் ஊறிப்போன வடமாநில, குறிப்பாக இந்தி பேசும் மக்களின் கலாச்சாரத்தின் வடிவம் என்பதை நிலை நிறுத்த, காங்கிரஸ் மட்டுமன்றி, மத்தியில் ஆளும் அனைத்து அரசுகளும் கடுமையாகப் போராடி வருகின்றன.

ஆனால் தமிழர்களின் சுயமரியாதை உணர்வும், போர்க்குணமும் ஒவ்வொரு தடவையும் அதை தகர்த்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடந்த போராட்டத்தில், அதை நீர்த்துப்போக வைப்பதற்காக, மத்திய அரசின் மறைமுக முகவர்களாக எத்தனையோ அரசியல் கட்சிகள், உள்ளே புகுந்து திசை திருப்ப முயற்சித்தன.

ஆனால், எந்த அரசியல் கட்சி பிரமுகர்களையும், போராட்ட களத்திற்குள் அனுமதிக்காமல், அதை சாதுரியமாக முறியடித்தனர் மாணவர்கள்.

அதேபோல், தொழில் நுட்ப ரீதியாக ஏற்படுத்திய செல்போன் சிக்னல் இடையூறுகளையும், தங்கள் தொழில்நுட்ப சாதுரியத்தாலேயே மாணவர்கள் தகர்த்தெறிந்தனர்.

ஏதாவது கலவரம் அல்லது வன்முறையை ஏற்படுத்தி, அதை உடைக்கலாம் என்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், மாணவர்களின் அகிம்சை அணுகுமுறைக்கு முன்னால் தோற்றுப் போனது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிரான ஹைடிரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மீண்டும் போராட்டத்தில் குதிக்க மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதனால், இன்னொரு மெரினா புரட்சி ஏற்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று, அதை முளையிலேயே கிள்ளி எறியும் பொருட்டு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக மெரினா கடற்கரை, பொது மக்கள் கூடும் மைதானங்கள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், வலைதளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்டு ஆங்காங்கே போராட்டத்தில் மாணவர்கள் குதித்து வருகின்றனர்.

அவ்வாறு, அனுமதி இன்றி திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தகவல், வலைத்தளங்கள் மூலம் வேகமாக பரவி வருகிறது. அதைக்கண்டு தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இந்த சம்பவம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், தமிழகம் மீண்டும் ஒரு மெரினா புரட்சியை சந்திக்க தயாராகி வருகிறது.

என்னதான், ஜெயலலிதாவின் மரணத்தை பெரிதாக்கி, மக்களின் சுயமரியாதை உணர்வையும், போராட்ட குணத்தையும் மழுங்கடிக்க மத்திய-மாநில அரசுகள் முயற்சித்தாலும், அது பலன் தராது என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

எனவே, தமிழக மாணவர்களின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணித்து, அவற்றை முறியடிக்க போலீஸ் படை குவிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து மாணவர்களின் படை வெற்றி வாகை சூடும்.

ஏனெனில், அது வேகம் நிறைந்த இளம் ரத்தம் மட்டும் கொண்டதல்ல, உலகத்தையே ஆட்டிப்படைக்கும் தொழில் நுட்ப மூளையையும் கொண்டது.