Students held in protest on the first day of school open Request to restore road ...
விருதுநகர்
தார்ச்சாலையை சீரமைக்க கோரி பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு செப்பனிடும் பணிகளை தொடங்கிய பின்னரே போராட்டத்தைக் விலக்கிக் கொண்டனர்..
திருச்சுழி - கமுதி சாலையில் இருந்து நரிக்குடி அருகிலுள்ள நத்தகுளம் கிராமத்துக்கு பிரிந்து செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலான தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
செப்பனிட்டு பல ஆண்டுகள் ஆகியதால் அந்தப்பகுதியாகச் செல்லும் அனைவரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நத்தகுளம் கிராமத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடம் திறந்த நிலையில் முதல் நாளே அந்த ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் சாலையை உடனடியாக சீரமைத்திட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகளை அழைத்து வந்து அந்த கிராமத்தினரும் போராட்டக் களத்தில் குதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருச்சுழி தாசில்தார் சின்னத்துரை, நரிக்குடி காவல் ஆய்வாளர் நிதிகுமார் ஆகியோர் அங்கு வந்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இருந்தும் அதை ஏற்க மறுத்த மாணவர்கள், “உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து லாரிகளில் மண் கொண்டு வந்து சாலை குழிகளில் கொட்டி தற்காலிகமாக செப்பனிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்களின் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
