கோவில்பட்டி ரெயில் நிலையத்தில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியருக்கு பயந்து ஊரை விட்டு ஓடிவந்த மாணவர்களை காவல்துறையினர் மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவில்பட்டியில் ரெயில்வே நிலையத்தில் சுற்றிதிரிந்த மாணவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் திங்கள்கிழமை மாலையில் இருந்து பள்ளி சீருடை அணிந்த 2 மாணவர்கள் அங்கும் இங்குமாக வெகு நேரமாக திரிந்து கொண்டு இருந்தனர்.

இதனைப் பார்த்த பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடந்து ரெயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் காசிமாயன் அந்த இரண்டு மாணவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மேலவீரவராகபுரத்தினைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தமிழ்ச்செல்வன், மலையப்பன் மகன் முத்துராஜ் என்பது தெரியவந்தது. இருவரும் மேலவீரவராகபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தங்கள் ஒருவரையும் ஒரு பெண்மணி மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தி வந்ததாக முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

இறுதியில் சனி, ஞாயிறு விடுமுறையில் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடம் எழுதாமால் பள்ளிக்கு சென்றதால் ஆசிரியர் திட்டுவார் என்று பயந்து மதியத்திற்கு மேல் பள்ளியில் இருந்து தப்பித்து வந்துள்ளனர்.

பின்னர், நெல்லை சந்திப்பு ரெயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் ரெயிலில் ஏறி அமர்ந்துள்ளனர்.

பின்னர் கோவில்பட்டி வந்து ரெயில் நின்றதும் இங்கு இறங்கி செய்வதறிமால் திகைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களையும் வரவழைத்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களிடம் ஒப்படைத்தனர்.