''உலக அளவில், மன உளைச்சல் பாதிப்பால் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர்,'' என மனநல மருத்துவர் சுவேதா பேசினார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில், திங்கள் கிழமை மனநல சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது.

சுகாதாரத்துறை இணை இயக்குனர் (நலப்பணிகள்) இன்பசேகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன், உறைவிட மருத்துவர் சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனநல மருத்துவர் சுவேதா பேசியதாவது: மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கப்பட்ட மனநல சிகிச்சை மையம், வாரத்தில் மூன்று நாட்கள் காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை செயல்படும்.

செவ்வாய்கிழமை குழந்தைகளுக்கும், வியாழக்கிழமை முதியோர்களுக்கும், சனிக்கிழமை மது மற்றும் போதை பொருள் பழக்கங்களால் மனநலம் பாதித்தவர்களுக்கு, மனநல சிகிச்சை அளிக்கப்படும்.

இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினர் போட்டிகள் நிறைந்த உலகில் தங்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு எதிர்ப்புகள், சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அதை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலையில் இளைய தலைமுறையினர் மனநல பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மேலும், மது மற்றும் போதை பொருட்கள் உபயோகிப்பதாலும் மனநலம் பாதிக்கிறது.

மனநல பாதிப்பால், உலகளவில், 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தனிமையில் பேசுவது, தனிமையை விரும்புவது, சம்பந்தம் இல்லாமல் கோபம் வருவது, தூக்கமின்மை போன்றவையும், ஒருவகை மனநல பாதிப்பு தான்.

இதுபோல், மனநல பாதிப்புகளுக்கு மனநல சிகிச்சை மையத்தில் ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்” என்று அவர் பேசினார்.