Sterlite will be reopened

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தின்போது பெரும் கலவரம்
ஏற்பட்டது. அரசு வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் தீக்கிறையாக்கப்பட்டன. பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தினர்.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தமிழக அரசு கூறியது. இது தொடர்பாக அரசாணை ஒன்றையும் வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராமநாத் கூறியுள்ளார். இன்னும் ஓரிரு
மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்றார். தற்போது ஆலை மூடப்பட்டிருப்பது தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் ஸ்டெர்லைட் பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிந்த பின்பு மீண்டும் ஸ்டெர்லைட் இயங்க தொடங்கும். தூத்துக்குடியில் அசாதரன நிலை நிலவி வருகிறது என்றும் அமைதி திரும்ப காத்திருக்கிறோம். அமைதி திரும்பிய பின் மீண்டும் ஆலை செயல்படும் என்றார்.

தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் என்றும், மக்கள் ஆலையை எதிர்க்கவில்லை என்றார். தொண்டு நிறுவன தூண்டுதலின்பேரில்தான் ஆலைக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் கூறினார். விரைவில் ஆலை திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ராமநாத் கூறியுள்ளார்.