மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரண்டாவது சிலை ஈரோட்டில் திறக்கப்பட உள்ளது.

முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதிக்கு கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார். கருணாநிதியின் குருகுலமான தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் இரண்டாவது சிலையை அமைக்க திமுக முடிவு செய்தது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 25-வது வட்டம், முனிசிபல் காலனியில் கட்சிக்கு சொந்தமான இடத்தில் முழு உருவ சிலை வைக்கப்பட உள்ளது.

இந்தச் சிலை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. வரும் 30-ஆம் தேதி மாலை இந்தச் சிலை திறப்பு விழா நடக்க உள்ளது. சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். அண்ணா அறிவாலயத்திற்கு பிறகு பொது இடத்தில் கருணாநிதிக்கு திறக்கப்படும் முதல் சிலை திறப்பு என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள திமுகவினர் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட உள்ளனர். குறிப்பாக கொங்கு மணடலத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் திரண்டுவர உள்ளதாக திமுகவினர் தெரிவிக்கிறார்கள்.

சென்னையை அடுத்து கொங்கு மண்டலத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படுவதால், அந்த மண்டல திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.