State government fears about central government - seeman and Gowthaman condemned
திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், கவுதமன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.
குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.
இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், கவுதமன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு எதை செய்தாலும் விமர்சிக்க கூடாதா? எனவும், நினைவேந்தல் 7ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது குற்றமா? எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கவுதம் பேசுகையில் கூறியதாவது :
திருமுருகன் காந்தி மீதானா குண்டர் சட்டம் நேர்மையற்ற செயல்.
இன உரிமைக்காக போராடுபவர்களை அரசு அச்சுறுத்தி வருகிறது.
மத்திய அரசுக்கு பயந்து மாநில அரசு போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
