Sri Lankan navy should not give any problem - fishermen worship

இராமநாதபுரம்

தடை காலம் முடிந்து கடலுக்குச் செல்லவுள்ள மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று மீன்வர்கள் வழிபாடு நடத்தினர்.

கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் மே மாதம் 29-ஆம் தேதி வரை 45 நாள்கள் விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்ல மத்திய, மாநில அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தடைகாலம் தற்போது 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளதையடுத்து இராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

மீனவர்கள் சிலர் தங்கள் விசைப் படகுகளை கரையில் ஏற்றி மராமத்து பணிகள் செய்து புதிதாக வர்ணம் அடித்து படகுகளை தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீன் பிடி தடை காலம் முடிவடைய உள்ளதால் பழுது பார்க்க கரையில் ஏற்றி நிறுத்தப்பட்டு இருந்த விசைப் படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் படகுகளில் மீன்பிடி வலை, ஐஸ் பெட்டி, மடி பலகை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை ஏற்றும் பணியை நேற்று முதல் தொடங்கி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.

61 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்வதால் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.

தடை காலத்தையொட்டி கடந்த இரண்டு மாதமாக வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை பகுதி நேற்று முதல் களை கட்ட தொடங்கியுள்ளது.

மேலும், இலங்கை கடற்படையால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று மீனவர்கள் சிறப்பு வழிபாடும் நடத்தி வருகின்றனர்.