Special Stories About Neutrino
உலகின் எந்த நாட்டிலும் கொட்ட முடியாத குப்பையையும், ஆபத்தான தொழிற்சாலைகளையும், இந்தியாவில் கொண்டு வந்து சேர்ப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
அதேபோல், இந்தியாவில் மற்ற மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்ட அனைத்தையும், தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் முனைப்பாக இருக்கிறது மத்திய அரசு.
கூடங்குளம் அணு உலை தொடங்கி, பாறை எரிவாயு என பலவற்றை அதற்கு உதாரணங்களாக கூறலாம்.
ஆனால் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்த, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மட்டும் தமிழகத்தில் இடமில்லை என்று கைவிரித்து விட்டது மத்திய அரசு.
அந்த வரிசையில், நெடுவாசல் மற்றும் வடகால் பகுதி மக்கள், ஹைடிரோ கார்பன் திட்டத்தை இப்பகுதியில் செயல் படுத்தக் கூடாது என்று தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ஹைடிரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட்டால், விவசாய நிலங்கள் பாழாகி தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கலங்கினர்.
பின்னர், மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததை அடுத்து, மக்கள் தங்களது போராட்டங்களை விலக்கிக் கொண்டனர்.
ஆனால், அதையும் மீறி, ஹைடிரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. அதனால் விவசாயிகள் கொதிப்படைந்துள்ளார்.
அந்த சூடு தணிவதற்குள், தேனி மாவட்டம் தேவாரம் மலை பகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில், இந்திய அணுசக்தி துறை சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் மாற்றமில்லை. தேனியில் திட்டமிட்டபடி அமைக்கப்படும். வேறு மாநிலத்திற்கு மாற்றப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மாசுகட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியை பெறுவதற்காக, இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து வெளியாகும் அணுத்துகள்கள் ஆகும். அந்த அணுத்துகள்களை ஆய்வு செய்வதற்காகவே, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
மலையை குடைந்து, பாதாளத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டி அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வகத்தால், விவசாய நிலங்கள் சீரழிந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஏற்கனவே அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால், கடந்த சில நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த திட்டம், தற்போது மத்திய அரசால் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களால் விரட்டி அடிக்கப்பட்ட, மக்களால் பெருமளவில் எதிர்க்கும் திட்டங்களை எப்படியாவது தமிழத்தில் திணித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.
தமிழர்களின் சுய மரியாதை உணர்வும், போர் குணமும் இன்றும் எஞ்சி இருப்பது விவசாயிகள் மற்றும் மீனவர்களிடம் மட்டுமே.
எனவே, அந்த இரண்டு வர்க்கத்தின் வாழ்வாதாரம் சீரழியும் வரை, தமிழத்தில் எதையும் கொண்டுவர முடியாது என்று எண்ணி, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் சம்பந்தப்பட்ட, நதி நீர் விவகாரம், நதிகள் இணைப்பு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றிற்கு இதுவரை தீர்வு எட்டப்படாமல் இருப்பதற்கும் இதுவே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்திய-இலங்கை கடல் பகுதியில் பெட்ரோலியம் அதிக அளவில் உள்ளதால், அதை தம்வசமாக்கும் வகையில் அமெரிக்கா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
அதை நேரடியாக இறங்கி செய்ய முடியாமல், அதன் எடுபிடி நாடுகளான நார்வே, சுவீடன் போன்ற நாடுகளை அதற்காக இறக்கி விட்டுள்ளதாகவும் தகவல்.
எனவே, தமிழக நில வளம், மீன் வளம் ஆகியவற்றை அழித்தால் மட்டுமே, மத்திய ஆட்சியாளர்களின் பழைய கலாச்சார புகுத்தலுக்கு எதிர்ப்பு வராமல் இருக்கும் என்று கணக்கு போடுகின்றனர்.
அதை மனதில் கொண்டே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் இடம் இல்லை என்று மத்திய அரசு கூறியது.
அதே சமயம், விளைநிலங்களை அழித்து மீதேன் எடுப்பது, விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பது, மீனவர்களை இலங்கை சுட்டுக் கொன்றால் கண்டு கொள்ளாமல் இருப்பது என்று செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
தமிழர்களின், சுயமரியாதை உணர்வையும், போர்குணத்தையும் அழிக்கவே மத்திய அரசு இப்படி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
