இராமநாதபுரம்,
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் திங்கள் கிழமையோடு முடிவிற்கு வந்தது.
இதுகுறித்து ஆட்சியர் நடராஜன் அரசு ஆணையை வெளியிட்டார்.
அதில், “கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமனம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தளபதி, மாவட்ட ஊராட்சியின் தனி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.
ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தமட்டில் இராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை, போகலு£ர் மற்றும் நயினார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரையும், மண்டபம், திருப்புல்லாணி, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குனர் (தணிக்கை) பரமசிவமும் பொறுப்பேற்றுள்ளனர். கிராம ஊராட்சிகளின் தனி அலுவலராக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) பொறுப்பேற்றுள்ளனர்.
இதேபோன்று பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் கமுதி பேரூராட்சியின் தனி அலுவலராக சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலமுருகனும், சாயல்குடி, அபிராமம், மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை மற்றும் தொண்டி ஆகிய பேரூராட்சிகளின் தனி அலுவலராக கமுதி பேரூராட்சியின் செயல் அலுவலர் குமரேசனும் பொறுப்பேற்றுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளை பொறுத்தமட்டில் அந்தந்த நகராட்சிகளின் ஆணையாளர்கள் அதன் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்கள் அனைவரும் அவர்களது பதவிக்கான பணிகளை செய்து வருவதுடன் தனி அலுவலருக்கான பணிகளையும் கூடுதலாக கவனிப்பார்கள்” என்று அதில் தெரிவித்து இருந்தது.
