நீலகிரி

நீலகிரியில் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு தூதர்கள், தேசிய வாக்காளர் நாள் விழாவில் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்தியாவில் தேசிய வாக்காளர் நாள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய வாக்காளர் நாளையொட்டி, மக்கள் இடையே வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

பேரணியை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, புளூமவுண்டன் சாலை, காபிஹவுஸ், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது.

இந்த பேரணியில் திரளான கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு தேசிய வாக்காளர் நாள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து தேசிய வாக்காளர் நாள் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 18 வயது நிரம்பிய 7 மாணவ - மாணவிகளுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

அப்போது அவர் பேசியது: "18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள், மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு தூதர்களாக 33 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

18 வயது நிரம்பியவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால், இடம் மாறும் போது அந்த பெயர்கள் நீக்கப் படவோ அல்லது விடுபடவோ வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை செய்யலாம்.

இதேபோல் நகராட்சி, தேர்தல் அலுவலகங்களிலும் படிவங்கள் பெற்றும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்" என்று அவர் கூறினார்.