விழுப்புரம்

கள்ளக்குறிச்சியில் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்த மாவட்ட செயலாளர் கே.ஜி.பி.ஞானமூர்த்திக்கு, அதிமுகவினர் (ஈபிஎஸ்-ஓபிஎஸ்) எதிர்ப்பு தெரிவித்ததால், “விரைவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்து எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பேன்” என்று கே.ஜி.பி.ஞானமூர்த்தி சபதம் ஏற்றார்.

விழுப்புரம் மாவட்டம், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வு.மான குமரகுருவை அக்கட்சி பொறுப்பில் இருந்து, டி.டி.வி. தினகரன் நீக்கினார்.

மேலும், புதிய மாவட்டச் செயலாளர் கே.ஜி.பி.ஞானமூர்த்தியை நியமனம் செய்தார். இதனையடுத்து கே.ஜி.பி.ஞானமூர்த்தி நேற்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிக்க தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

இதனையறிந்த அதிமுக (அம்மா - புரட்சித்தலைவி அம்மா) அணியைச் சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்தில் திரண்டு கே.ஜி.பி. ஞானமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்களை தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க விடமாட்டோம் என்று ரகளையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலாளர்கள பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

பின்னர். மாலை 3.15 மணியளவில் மாவட்ட செயலாளரான கே.ஜி.பி. ஞானமூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் நோக்கி வந்தனர்.

கச்சேரி சாலைக்கு வந்த அவருக்கு, அவருடைய ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். அப்போது காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கே.ஜி.பி.ஞானமூர்த்தியிடம் சென்று, கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க.வினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே, இங்கிருந்து சென்று விடுமாறு கூறினார். இதனையேற்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது கே.ஜி.பி.ஞானமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:

“ஜெயலலிதா திறந்து வைத்த சிலைகளுக்கு என்னை மாலை அணிவிக்கக் கூடாது என சிலர் தடுக்கின்றனர். காவலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது நான், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்கிறேன்.

ஆனால், கூடிய விரைவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்து, பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பேன்” என்று சபதம் ஏற்றார்.