போலி பத்திரம் கொண்டு நிலம் அபகரிக்கப்பட்டதாக கூறி, ஓசூர் தாலுகா அலுவலகத்தில் மகன்கள், மருமகள்கள், பேத்தி என 36 பேருடன் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள திப்பாளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராமப்பா (75). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில், ரூ.10 கோடி மதிப்புள்ள, 5.25 ஏக்கர் நிலம் இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், 28.5 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கும், 19 சென்ட் நிலத்தை சாலை அமைக்கவும், 25 சென்ட் நிலத்தை கெலவரப்பள்ளி அணை கால்வாய் அமைக்கவும் வெங்கடராமப்பா வழங்கியுள்ளார். மீதமுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் போலி பத்திரம் தயாரித்து வெங்கட்ராமப்பாவின் நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த வெங்கடராமப்பா, ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடராமப்பா, தன் மகன்கள் கோபால், முருகேசன், வெங்கடேஷ், முரளி மற்றும் தன் மருமகள்கள், பேத்திகள், உறவினர்கள் என மொத்தம், 36 பேருடன் திங்கள்கிழமை மதியம், ஓசூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் திடீரென கையில் கொண்டு வந்திருந்த, மண்ணெண்ணெயை, தன் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓசூர் நகர காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தடுத்து நிறுத்தினார்கள். பிறகு அவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.