சிவகாசியில் தனது கள்ளக் காதலை கண்டித்த தம்பியை கொலை செய்ய திட்டம் தீட்டிய வள்ளி என்ற பெண் சிக்கன் குருமாவில் விஷம் வைத்துள்ளார். அந்த சிக்கனை சாப்பிட்ட தம்பி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி லிங்காபுரம் காலனியில்  உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் முருகன், கணேசன், அய்யாதுரை என்பவர்கள் உள்ளிட்ட 8 நண்பர்கள் மது வாங்கிக் கொண்டு முருகன் என்பவர் வீட்டில் சிக்கன் குழம்புடன் மது அருந்தியுள்ளனர்.அவர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு குற்றாலம் செல்லலாம் என திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் மது அருந்திய சில நிமிடங்களில் காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அதற்குள்  மதுகுடித்த மேலும் 3 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கு கணேசன், ஜம்பு, கவுதம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இதே போல் முருகனுடன் சேர்ந்து மது குடித்த அய்யப்பன், ஜனார்த்தனன்,  சரவணகுமார், அரிகரன் ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.

3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அந்தப்பகுதி முழுவதுமே பரபரப்பும் பதற்றமும் உருவானது. எத்தனை பேர் மது குடிக்க சென்றனர், எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் அண்ணன் முருகன் தனது வீட்டில் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். முதலில் அவர்கள் மது வாங்கிய மதுக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கூட்டாக மது அருந்தியபோது என்ன சாப்பிட்டார்கள் என விசாரித்தபோது முருகனின் அக்கா வள்ளி என்பவர் சமைத்து வைத்த சிக்கனை அவர்கள் அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரிப்பதற்காக வள்ளியைத் தேடியபோது அவர் வெளியூர் சென்றிருப்பது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து அவரை அழைத்து வந்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

முருகனின் அக்கா வள்ளி கணவரைப் பிரிந்து, அவருடன் வசித்து வருகிறார். வள்ளி அங்குள்ள அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த அச்சக உரிமையாளர் செல்வம் என்பருக்கும், வள்ளிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதனை முருகன் கண்டித்துள்ளார். மேலும் இனி அந்த அச்சகத்துக்கு வேலைக்குப் போக வேண்டாம் எனக் கூறி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வள்ளி  தனது தம்பி முருகனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்காக கள்ளக் காதலன் செல்வத்திடம் ஐடியா கேட்டுள்ளார்.

அவர் முருகன் சாப்பிடும் உணவில் விஷம் வைத்து விட்டால் பிரச்சனை இருக்காது எனக்கூறி, பாய்ஸன் வாங்கிக் கொடுத்துள்ளார். வள்ளியும் சம்பவ தினத்தன்று தான் சமைத்த சிக்கன் உணவில் விஷம் வைத்துவிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் முருகனும் அவரது நண்பர்களும் கூட்டாக சேர்ந்து மது அருந்திவிட்டு சைடு டிஸ்ஷாக விஷம் வைத்த சிக்கனை சாப்பிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அடுக்கடுகாக சுருண்டு விழுந்து இறந்தனர். விஷ உணவை சாப்பிட்ட 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வள்ளி அளித்த இந்த பகீர் தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது,.இதையடுத்து வள்ளி, செல்வம் ஆகியோரை காவல் துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர்,