Shocked people in the expectation that drinking water would be distributed Green water contaminated water
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்ப்போடு இருந்த மக்கள் பச்சை நிறத்தில் அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல என்ற மனநிலையில் மக்கள்.
திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், காமராஜர் அணையில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படும் வழியில் உள்ள கிராமங்களுக்கும் அந்த திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் நேற்று வழங்கப்பட்டது. அப்போது குடிநீர் பச்சை நிறத்தில் இருந்தது. அதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், குடிநீர் மிகவும் அசுத்தமாகவும் இருந்ததால் குடிக்க முடியவில்லை என்றனர் மக்கள்.
குடிநீர் நிறம் பச்சையாக உள்ளதால், குளித்தால் தோல் பாதிப்பு வந்து விடும் என்றும் மக்கள் பீதி அடைந்தனர். இதனால் அதனைப் பயன்படுத்தாமால் மக்கள் தவிர்த்து விட்டனர்.
நேற்றைய தினம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அசுத்தமாக பச்சை நிறத்தில் குடிநீர் வந்ததால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற மனப்பாங்கே மக்கள் மனதில் ஓடியது.
சிலர் விலைக்கு குடிநீர் வாங்கினர். ஒருசிலர் குளிப்பதற்கு மற்றும் இதர பயன்பாட்டுக்கும் லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
“ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்.
நீரேற்று நிலையங்களில் உள்ள தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
பச்சை நிறத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் குடிநீர் வழங்க வேண்டும்” என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
