ஈரோடு

ஈரோட்ட்டில் குடிநீருடன் சாக்கடை கலந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சி கோட்டுவீராம்பாளையத்திற்கு உள்பட்ட பாக்கியலட்சுமி நகர், ஐயப்பன் நகர் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ளவர்களுக்கு சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்குள்ள தீயணைப்பு நிலையம் அருகில் பிரதான குழாயில் தொட்டி கட்டப்பட்டு அதில் கேட் வால்வு அமைக்கப்பட்டு உள்ளது.

நாள்தோறும் காலை 8 மணி அளவில் இந்த கேட் வால்வு திறக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிற நிலையில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறி பாக்கியலட்சுமி நகர், ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று காலை 6.30 மணி அளவில் ஒன்று திரண்டனர்.

அவர்கள் அனைவரும் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து அறிந்ததும் சத்தியமங்கலம் நகராட்சி பொறியாளர் கணேஷ், சுகாதார அதிகாரி மணிவண்ணன், உதவி அதிகாரி மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம், பொதுமக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கால்வாய் தரையில் தோண்டப்பட்ட சிறிய பாதை வழியாக சென்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாக்கடை கால்வாய் பகுதியை சிலர் அடைத்து விட்டனர். இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்க தொடங்கியது. மேலும் தேங்கிய சாக்கடை கழிவுநீர் அருகில் அமைக்கப்பட்டு இருந்த ‘கேட் வால்வு’ தொட்டிக்குள் புகுந்தது. தொடக்கத்தில் எங்களுக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீர் பழுப்பு நிறத்தில் வந்தது. பின்னர் நாளாக நாளாக குடிநீர் கருப்பு நிறமாக மாறியது. மேலும் குடிநீர் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும்’ என்றனர்.

இதில் சமாதானமடைந்த மக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் - பண்ணாரி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.