சென்னை கடற்கரை சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வோருக்கான தனி வழி பாதை ஒதுக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சமீப காலமாக முக்கிய பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் சைக்கிளிங் செல்வதை நாம் காணமுடிகிறது. சென்னை கிழக்கு கடற்சாலையில் தினமும் அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை ஏராளமானோர் சைக்கிள் மூலம் உடற்பயற்சி மேற்கொள்ளுவது அதிகரித்து வருகிறது. சென்னைவாசிகளின் ஒரு பிடித்தமான உடற்பயிற்சியாக சைக்கிளிங் செல்வது மாறிக்கொண்டு வருகிறது.

குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது ஈசிஆர்யில் சைக்கிளிங் செல்வதும் , அங்கு இருக்கும் மக்களிடையே கலந்துரையாடுவது, மக்கள் அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுப்பதையும் நம்மால் பார்க்கமுடிகிறது. மேலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்டம் விட்டு மாவட்டம் என்று தொலைதூரம் சைக்கிளிங் செல்வது வழக்கம். உடற்பயிற்சி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவர் அடிக்கடி சைக்கிளிங் மேற்கொண்டு வீடியோ வெளியீடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நடிகர் ஆர்யா கூட தொலை தூரம் வரை கூட சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு.

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை முதல் முட்டுக்காடு வரையிலான 15 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்வோருக்கான தனி வழி பாதை ஒதுக்கப்பட்டு, சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் காலை வேளைகளில் சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வோர்கள் வாகனங்களின் வேகத்தால் பயமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோருக்கு பாதுகாப்பான வழி அமைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒருங்கிணைந்து, கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான 15 கி,மீ. தூர பாதையில், தற்காலிகமாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள தனி பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.இந்நிலையில், நேற்று கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான சைக்கிள் பயணத்திற்காக அமைக்கப்பட்ட தனி வழியில் சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை விளையாட்டு பிரிவைச் சேர்ந்த 40 காவல் ஆளிநர்கள் மற்றும் 150 பொதுமக்களுடன், சைக்கிள் பயண சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மேலும், காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை நடைபெற்ற சோதனை ஓட்டத்தில், இந்த வழித்தடத்தில், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல், அடையாறு துணை ஆணையாளர் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (தெற்கு) தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்புடன் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் இனிதே முடிவடைந்தது. இந்த சோதனை ஓட்டத்தில் சைக்கிள் பயணம் பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் நடந்ததாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், சைக்கிள் பயணத்தில் பங்கு பெற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், அதேபோல் இன்று காலை இதே வழித்தடத்தில் மீண்டும் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இனி ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை அக்கரை முதல் முட்டுக்காடு வரையில் சைக்கிள் பயணத்திற்கான தற்காலிக ஒருவழி பாதை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.