sekar reddy caught in benami act
பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில் தற்போது வருமான வரித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட பலர் சிக்கியுள்ளனர் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பணம் பதுக்கல், வரிஏய்ப்பு போன்றவற்றுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்ததாக பினாமி சொத்துக்கள் வைத்துள்ளவர்களை குறைத்துள்ளது. இதற்காக பினாமி சொத்துக்கள் பரிமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில், பினாமி சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, தமிழகத்திலும் பினாமி சொத்துக்களை வைத்துள்ளவர்களை கண்டறித்து, பறிமுதல் செய்ய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகள் தவிர, சமீபத்தில் நடந்த பினாமி சொத்துக்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பினாமி சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.

இதேபோல் சேகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது, பினாமி சொத்துக்கள் பற்றிய விவரங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து, பினாமி சொத்துக்கள் வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்துள்ளது.
இந்நிலையில், சேகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட 66 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ரூ.433 கோடி பினாமி சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் புதிய பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 433 கோடி சொத்து முடக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சந்திப்பில் உள்ள கட்டிடம் பினாமி பெயரில் உள்ளது. அதன் உரிமையாளருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மற்றவர்கள் நோட்டீசுக்கு விளக்கம் அளித்து வருகிறார்கள்.
முடக்கப்பட்டுள்ள பினாமி சொத்துக்கள் மீது அதன் உரிமையாளருக்கு சொத்து மதிப்பில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறினால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் எரிசக்தி நிறுவனம் ஒன்றை பினாமி பெயரில் நடத்தி வந்தார். அந்த நிறுவனம் முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
