வாடிப்பட்டியில் சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரை அமைதியான முறையில் ஊர்வலம், அனுமதிப்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை தமிழக மக்கள் நடத்தி வந்தனர். தற்போது சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளது.

சல்லிக்கட்டு மீதான வழக்குக்கு இன்று பதிலளித்த உச்சநீதிமன்றம், “சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க முடியாது, சல்லிக்கட்டு நடத்தை இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி தமிழக மக்களின் பொறுமையை சோதித்துள்ளது.

பொங்கள் பிறக்க இன்னும் ஒரு நாளே இருக்கும் தருவாயில், சல்லிக்கட்டை நடத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை போகிக்கு பழையன கழித்தல் போல தீயிலிட்டு கொளுத்தப் போகிறோம் என்று மக்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அரசு பேருந்தின் கண்ணாடியை ஐந்து இளைஞர்கள் உடைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் அந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.