மதுரை அருகே மாணவர்கள் கைகாட்டியும் நிறுத்தாமல் சென்ற பேருந்து மீது கல்லெறிந்ததால், பேருந்தின் பின்புற கண்ணாடிகள் உடைந்த சம்பவம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள யா.கொடிக்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் வழியாக அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் சிலர் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்திற்காக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மாணவர்கள் கை காட்டியும் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லை எடுத்து பேருந்தின் பின்புற கண்ணாடி மீது வீசியுள்ளனர். இதில், பஸ் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு, அதிர்ச்சிய ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். ஆனால், அதற்குக்குள் பேருந்து மீது கல்லெறிந்து விட்டு பள்ளி மாணவர்கள் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த ஒத்தக்கடை போலீஸார், உடைந்த பஸ் கண்ணாடியை ஆய்வு செய்தனர்.

பேருந்து கண்ணாடி உடைந்த சம்பவத்தில், நல்வாய்பாக பயணம் செய்த பயணிகள் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், மதுரையில் இதுப்போன்று சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, நிறுத்தத்தில் பேருந்து சரியாக நிற்காமல் செல்வதும், ஆத்திரத்தில் மாணவர்கள் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்று காரணமாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வழித்தடங்களிலும் அரசு பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மாணவர்கள், முன்போல் பேருந்துகளில் செல்லமுடியாமல் காத்து கிடப்பதாகவும் சரியான நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் ஓடுவதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. இதனால் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று மாணவர்களை ஏற்றினால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியப்படி பயணிக்கும் நிலை ஏற்படும். இதனால் தகராறு, அடித்தடி, விபத்து உள்ளிட்ட விபரிதங்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. இதனாலே சில நேரங்களில் பஸ்களை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். அதனால், மாநகர், புறநகர் பகுதியில் வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கவும், பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை, கல்வித்துறை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் அரசு, தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியப்படி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிகல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறைவான பேருந்து வசதி உள்ள வழித்தடங்களில் கூடுதலான பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் பள்ளியிலிருந்து மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
