வாணாபுரம்,
மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான பின்பு சுகாதாரத்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தண்டராம்பட்டு தாலுகா தென்கரும்பலூரைச் சேர்ந்தவர் சரவணன் என்பவரின் மகள் ஸ்ரீநிதி (11). இவர் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 26-ஆம் தேதி ஸ்ரீநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும், சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீநிதி உயிரிழந்தார்.
பள்ளி மாணவி மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் தென்கரும்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழவச்சனூர் செட்டிதெருவைச் சேர்ந்த பானு (2) சாதனா (5) ஆகிய இரண்டு சிறுமிகள் மர்மகாய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது தென்கரும்பலூரை சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீநிதி மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
அடுத்தடுத்து அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மர்மகாய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்மகாய்ச்சலால் பள்ளி மாணவி பலியான பிறகு, நேற்று தண்டராம்பட்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் தென்கரும்பலூரில் முகாமிட்டு குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் உடல் நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தண்டராம்பட்டு தாசில்தார் சஜேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தென்கரும்பலூருக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது வீடுகளின் அருகே தேங்கி நின்ற கழிவுநீர், குப்பைகள் உள்ளிட்டவைகளை அகற்ற துப்புரவு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின்போது வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷம்ஷாத்பேகம், கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மர்ம காய்ச்சலால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மர்மகாய்ச்சல் மற்ற கிராமங்களுக்கும் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
