ஆவடியில் பள்ளி மாணவனை சரமாரியாக கத்தியால் வெட்டிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் தேவி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வேணு. கட்டிட தொழிலாளி. இவரது மகன் பாபு (14), அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டின் மாடியில் பாபு நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், திடீரென பாபுவிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் மர்ம நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாபுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார்.

இதில் ரத்தம் கொட்டி பாபு அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பாபுவுக்கு மார்பு, தோள், கை, முகம் என பல இடங்களில் பாபுவுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் பெரியதுரை வழக்குப்பதிவு செய்து காதல் விவகாரமாக அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.