பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரை பள்ளி மாணவன் தாக்க முயலும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரை தாக்கும் மாணவன்

தாய், தந்தைக்கு அடுத்து, தெய்வத்திற்கு ஒரு படி மேலே வைத்து பார்க்கப்படும் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்வபம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப் போகும் பள்ளிக்கு, பாடம் பயிலச் செல்லும் மாணவர்கள் சமூக விரோதிகள் போல செயல்படுவதும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் தரம் தாழ்ந்து தாக்க முற்படுவதும் அடுத்த தலைமுறை மிகப் பெரிய ஆபத்தை நோக்கி செல்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

பாதுகாப்பு கேட்கும் ஆசிரியர்கள்

ஏற்கனவே தேனி மாவட்ட பள்ளிக்கூடத்தில் போலீசை கத்தியால் குத்துவேன், நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில், போட்டா பெயில் என்று மிரட்டி பேசும் மாணவனுக்கு பயந்து 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லை என மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், மற்றொரு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரை மாணவன் ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்க முயலும் காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் பரவிவருகிறது. மாணவன் அடிக்க முயலும் போது என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியர் நிற்கும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகிறது. மற்றொரு மாணவன் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு திட்டும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவரவியல் ரெக்கார்டு நோட்டை ஆசிரியரிடம் சமர்பிக்காமல் மாணவன் இருந்துள்ளார். மேலும் பள்ளி வகுப்பறையிலேயே பாய் விரிந்து மாணவன் தூங்கியுள்ளான் இது தொடர்பாக ஆசிரியர் மாணவனிடம் விளக்கம் கேட்டுள்ளார் இதற்கு தான் மாணவன் ஆசிரியரை தாக்க முற்பட்டதாக தகவல் வெளியானது.

அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்

இந்த காட்சியை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அந்த பள்ளியில் கோட்டாச்சியர், வட்டாச்சியர் ஆசிரியர் சஞ்சய், மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இளம் தலைமுறையினர் சீரழிந்து தடம்புரண்டு, தடுமாறிப் போவதை தடுக்க வேண்டுமானால் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் அனைத்து விசயங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.