சின்னதம்பி யானையை பிச்சைக்காரனாக மாற்றிய செம்மண் மாஃபியா.. கொம்பை உடைத்து சாவை நோக்கி தள்ளும் குரூரம்!

சின்னதம்பியின் கதை வெளியே தெரிந்துவிட்டது, ஆனால் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட சில யானைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவற்றின் உயிரிழப்புக்கு இந்த செம்மண் மாஃபியாக்களே பொறுப்பு என்கிறார்கள். 

save chinnathambi elephant

#savechinnathambi - சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் ஹேஸ்டேக் இது. தமிழகத்தின் ஒரு காட்டு யானையை காப்பாற்றுவதற்காக கடல் கடந்தும் ஆதரவு குரல்கள் கிளம்பியுள்ளன. ஒரு வன உயிருக்காக பெருமளவு ஜனம் கைதூக்குவதெல்லாம் இந்த தேசத்துக்கு மிகவும் புதிது. ஆனால்  சாத்தியப்பட்டிருக்கிறது இந்த ஜீவகாருண்ய ஆச்சரியம்!

இவன் தான் சின்னதம்பி... கோயமுத்தூர் சிட்டி அருகே தடாகம் வனப்பகுதியில் வாழ்ந்தபடி மாலை வேளைகளில் வெளியே வந்து கிராமங்களில் உள்ள பயிர்களையும், சாலையோர தாவரங்களையும் தின்று வாழ்ந்து வந்த சின்னதம்பிக்கு ஏன் காடுகடத்தப்பட்டான்? இவனுக்கு சில நாட்கள் முன்னால் இதே பகுதியை சேர்ந்த விநாயகன் எனும் யானையும் காடு கடத்தப்பட்டதே ஏன்? இந்த காட்டுப் பேருயிர்களின் கண்ணீருக்கும், கவலைக்கும் அவர்களே காரணமா அல்லது மனிதர்களின் கை உள்ளதா? உலகமே கண்ணீர்வடிக்கும் சின்னதம்பியின் சோகத்தின் பின்னணி என்ன?...

save chinnathambi elephant

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி ஏஸியாநெட் தமிழ்,  சின்னதம்பி மற்றும் விநாயகன் வாழ்ந்த கோயமுத்தூர்  மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டது. அதில் கிடைத்த தகவல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன. மனிதனின் அகோர பணப்பசி எந்தளவுக்கு வனத்தை கற்பழித்திருக்கிறது என்பதும், இயற்கையின் பிள்ளைகளான வன உயிரினங்களை எந்தளவுக்கு குரூரக்கொலை செய்து கொண்டிருக்கிறது என்பதும் விளங்குகின்றன. A.N.T. (ஏஸியாநெட் தமிழ்) டீம் கண்டதும், கேட்டதும், உண்மை என உணர்ந்ததும் இவைதான்...


* உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் இவற்றுக்காக வருடம் தோறும் யானைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் நோக்கி காடுகள் வழியே செல்வது அதன் பரம்பரை குணம். அப்படி செல்லும்  வெகு சில யானைகள் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளிலேயே மிக நீண்டகாலம் தங்கிவிடுவதுண்டு. 

* கோயமுத்தூர் மாநகரிலிருந்து மிக குறைந்த தூரத்திலிருக்கும் தடாகம் வனப்பகுதியில் இப்படித்தான் கடந்த சில அண்டுகளாக இரண்டு ஆண் யானைகள் நெடுங்காலமாக தங்கிவிட்டன. முக லட்சணத்துடன், முரட்டு பீஸாக ஒரு யானையும்,  துள்ளல் ஆட்டத்துடன் ஒரு யானையுமாக இருவரும் அந்தப் பகுதி வன கிராமங்களுக்குள் ஜோடியாக வளையவந்து தின்று களித்தனர். save chinnathambi elephant

* லட்சணமான முகமுடைய சீனியருக்கு விநாயகம்! என்றும், சின்னவனுக்கு சின்னதம்பி என்றும் ஊர்மக்கள் பெயர் வைத்தனர். சின்னதம்பி குறும்பானவனே தவிர அபாயம் தரமாட்டான். ஆனால் விநாயகன் சப்தமில்லாமல் இருப்பான், ஆனால் சில நேரங்களில் மனிதர்களை போட்டுத் தள்ளுமளவுக்கு ஆத்திரம் காட்டிவிடுவான். இவன் தும்பிக்கையால் சில மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. குறிப்பாக வனத்துறைக்கு உதவியாக யானை விரட்டும் பணியில் இருக்கும் ‘RRT’ எனப்படும் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமை சேர்ந்த வெங்கடேஷ் எனும் ஊழியரின் உயிரிழப்பு, மிகப்பெரிய இழப்பாய் பார்க்கப்பட்டது. 

* விநாயகனால் உயிரிழப்பு தொடர்வதாலும், இரண்டு யானைகளாலும் பயிரிழப்பு தொடர்வதாலும் அங்கிருக்கும் விவசாயிகள் ‘இது ரெண்டையும் பிடிச்சு, இடம் மாத்துங்க.’ என்று தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். சில காலம் பொறுத்துப் பார்த்த அந்த ஏரியா அரசியல்வாதிகள் ஒரு கட்டத்தில் ‘வாக்கு வங்கி’ பறிபோய்விடும் எனும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு முகம் காட்டினர். விளைவு முதுமலையில் இருந்து கும்கிகள் வரவழைக்கப்பட்டு முதலில் விநாயகனையும், அடுத்து சின்னதம்பியையும் தூக்கி, காடு கடத்தினர். save chinnathambi elephant

* முரட்டு பீஸ் என்றாலும் கூட விநாயகனை பிடிக்கையில் பெரிய பிரச்னை இல்லை. அவன் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி மாட்டி முதுமலையில் கொண்டு விட்டனர், அவன் அப்படியே மேய்ந்தபடி கர்நாடக வனத்தினுள் சென்றுவிட்டான். 

* ஆனால் சின்னதம்பியை பிடிக்கும் போது அவன் கடந்த சில நாட்களாக ஒரு பெண் யானை மற்றும் ஒரு குட்டியுடன் ஒரு குடும்பமாகவே சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான். 

* பொதுவாக வளர்ந்த ஆண் யானைகள் கூட்டத்தில் தங்காது, குடும்பம் பற்றி கவலைப்படாது. இணைசேர்வதற்காக மட்டுமே கூட்டத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பெண் யானையை கவர்ந்து, தனியே பிரித்துக் கொண்டு போய் ‘சம்பவத்தை’ நிகழ்த்தி, கர்ப்பிணியாக்கும். ஆனால் சின்னதம்பியோ கிட்டத்தட்ட மனிதர்களைப் போல் ஃபேமிலி மீது கவனம் செலுத்துபவனாய் இருந்திருக்கிறான். அதனால்தான் குட்டியோடு இருக்கும் பெண் யானை மீது பாசம் காட்டியிருக்கிறான். அவை இரண்டுமே சின்னதம்பியை அளவு கடந்து நேசித்திருக்கின்றன. அதனால்தான் சின்னதம்பியை காடு கடத்துவதற்காக, மயக்க ஊசி சுட முயன்றபோது அந்த இரண்டு யானைகளும் அவன் அருகிலேயே நின்று அடம் பிடித்திருக்கின்றன. முதல் ஊசி போடப்பட்டு, சின்னதம்பி கிறங்கி நின்றபோதும் அவனுக்கு துணையாகவே நின்று வனத்துறையை மிரட்டியுள்ளன. ஆனாலும் அவை ஒருகட்டத்தில் விரட்டப்பட்டு, சின்னதம்பி  பிடிக்கப்பட்டான். save chinnathambi elephant

* சின்னதம்பியை பிடித்தபோது அவன், லாரியில் ஏற மறுத்து அடம் செய்தபோது கும்கி விஜய் அவனை பின்னாடி இருந்து தனது நீளமான, கூர்மையான தந்தத்தால் குத்திக் குத்தி தள்ளியது குரூரம். ‘விலங்கினை வைத்தே விலங்கை துன்புறுத்தும் கேடுகெட்ட மனித இனம்’ என்று இதற்கு விமர்சனம் வெளியானது. மயக்கம் மற்றும் மிரட்சியில் தடுமாறி லாரி மற்றும் ஜேசிபியில் மோதி சின்னதம்பி விழுந்தபோது அதன் கொம்புகள் காயமாகி சிறிது உடைந்தன. 

* பிடிக்கப்பட்ட சின்னதம்பி பொள்ளாச்சி, டாப்சிலிப் தாண்டி வரகளியாறு எனும் அடர் வனத்தினுள் விடப்பட்டான். ஆனால் லாரியில் தான் கொண்டு செல்லப்படும் பாதையை மோப்பம் பிடித்துக் கொண்டே வந்தவன், வெறும் இரண்டே நாட்களில் மலைகளை கடந்து, மலையிறங்கி, பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கிராமத்துக்கு வந்துவிட்டான். அவனது நோக்கம் முழுக்க தான் வந்த பாதையின் வழியே மீண்டும் கோயமுத்தூரின் தடாகம் வனம் செல்வது, தான் பிரிந்த உறவுகளோடு இணைவதும், தனக்கு பிடித்தமான தடாகம் வனப்பகுதியில் தங்குவதுமாகதான் இருந்தது. ஆனால் அவனை வனத்துறை மறித்து திசைமாற்றிட, மீண்டும் டாப்சிலிப் ஏறுவதற்கு பதிலாக உடுமலை, பழநி என்று பாதைமாறிவிட்டான்.

 save chinnathambi elephant

* சின்னதம்பி இப்போது கிட்டத்த்ட்ட தனது காட்டு யானைத்தன்மையை இழந்து கொண்டு வருகிறான் என்பதே வல்லுநர்களின் கணிப்பு. வனத்துறை கொண்டு வந்து போடும் தென்னை மட்டை உள்ளிட்ட பசும் தீவனங்களை எடுத்து தின்ன பழகி கிட்டத்தட்ட பிச்சைக்காரனாகவே மாறிவிட்டான். 

* சரி! இந்த கதையில் செம்மண் மாஃபியா எங்கே வந்தது? என்பீர்கள்....விநாயகனும், சின்னதம்பியும் வலம் வந்த கோயமுத்தூர் தடாகம் வனத்தை பகுதியை சுற்றி செம்மண்  பிரதேசம்தான். இங்கே அனுமதி பெற்றும், பெறாமலும் ஏகப்பட்ட செங்கல் சூளைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி செம்மண்ணை  தோண்டிக் குவிக்கும் இவர்களால் வனத்தில் அபாயகரமான அதலபாதாள பெரும் பள்ளங்கள்  உருவாகிவிட்டன. இந்த பகுதியெல்லாம் காலம் காலமாக யானைகள் நடந்து சென்ற வலசைப் பாதைகள். ஆக காடுகள் அழிக்கப்பட்டு பள்ளங்கள் உருவாகிவிட்டதால் யானைகள் பாதை மாறி, அங்கிருக்கும் ஊர்ப்பகுதிகளுக்குள் வந்தன. வந்த இடத்தில் கரும்பு, சோளம் என்று ருசியாக தின்று பழகின. பல யானைகள்  வேறு வனம் நோக்கி நகர்ந்துவிட, விநாயகமும் சின்னதம்பியும் அங்கேயே தங்கிவிட்டன. save chinnathambi elephant

* பெரும் பள்ளங்களை தோண்டியிருப்பதோடு, புதிய மணலுக்காக மேலும் மேலும் வனத்தை அழித்துக் கொண்டே செல்லும் செம்மண் மாஃபியாக்களை கோயமுத்தூர் மாவட்ட நிர்வாகம், கனிமவள துறை வனத்துறை, காவல்துறை என்று யாருமே தட்டிக் கேட்பதில்லையாம். எல்லா மட்டங்களிலும் பணம் விளையாடுகிறதாம். இந்த செம்மண் மாஃபியாவால் வனம் அழிந்து கொண்டே வருவதால் மிக முக்கியமான மேற்குதொடர்ச்சி மலைத்தொடரின் இணைப்புச் சங்கிலி அறுபட்டு கிடக்கிறது. இதனால்  இந்த மலை வனத்தை நம்பி வாழும் பல உயிர்கள் உணவு, இருப்பிடமில்லாமல் இறக்கின்றன. செம்மண் மாஃபியாக்கள் தோண்டிய பெரும் பள்ளங்களில் விழுந்து எழ முடியாமலும், மழைநேரத்தில் அப்பள்ளத்து நீரில் விழுந்து எழ முடியாமலும் இறந்த யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாம். ஆனால் எல்லாம் மலைவன அடிவாரம் என்பதால் வெளியே தெரிவதில்லை. இவற்றுக்கு எதிராக சீறும் பத்திரிக்கைகள் கூட சில சமயங்களில் பக்குவமாக அமைதியாக்கப்படுகிறதாம்.

 save chinnathambi elephant

* இந்த சின்னதம்பியின் கதை வெளியே தெரிந்துவிட்டது, ஆனால் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட சில யானைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவற்றின் உயிரிழப்புக்கு இந்த செம்மண் மாஃபியாக்களே பொறுப்பு என்கிறார்கள். இன்று உணவுக்கும், நீருக்கும் மனிதர்களின் கைகளை பார்த்தபடி, பிச்சைக்காரனாக திரியும் சின்னதம்பியை இப்படியே மன உளைச்சல் மற்றும் பசிக்கு நடுவில் விட்டால் கூடிய விரைவில் அவன் உடல் மோசமாகி சாவது உறுதி! என்கிறார்கள். அதேபோல், கும்கியாக மாற்றிடுவதற்காக மீண்டும் மயக்க ஊசி போட்டுப் பிடிக்க நினைத்தால், மீண்டும் மீண்டும் ஊசி மருந்தின் வீரியத்தை அவன் உடல் தாங்குமா? என்பதும் கவலைக்குரிய கேள்வியே. சின்னதம்பியை கும்கியாக்கிவிடலாம்! என்று மிக அலட்சியமாக பதில் சொல்லும் அதிகார வர்க்கம்  இந்த செம்மண்மாஃபியாக்களை சராசரி மனிதனாக மாற்றுவது எப்போது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios