பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் குறித்த விசாரணை அறிக்கையை வரும் திங்கட் கிழமைக்குள் தாக்கல் செய்ய வினய்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அதற்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும்   சிறைத்துறை, டி.ஜி.பி சத்யநாராயணா  மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார்.

இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற வினய்குமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் என சித்தராமையா அறிவித்தார்.

மேலும் இந்த குழு விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும்  ஒரு மாதத்தில் முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து நேற்று முன் தினம் வினய்குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. அதை தொடர்ந்து நேற்று சிறையில் ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில் இன்றும் இந்த குழு பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறை சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது.  இதையடுத்து  வரும் திங்கள் கிழமைக்குள் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.