விழுப்புரம்

சசிகலா, டி.டி.வி. தினகரன் தலைமையில் கட்சி மற்றும் ஆட்சி அமையும்போது தான் கட்சி இராணுவ கட்டுக்கோப்போடு செயல்படும் என்று பிரபு எம்.எல்.ஏ தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டம் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.பி.ஞானமுர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் செழியன், மாவட்ட அவைத்தலைவர் முத்துரங்கன், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளர் வஜ்ரவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பிரபு எம்.எல்.ஏ., கழக தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், கழக செய்தி தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பிரபு எம்.எல்.ஏ. பேசியது: "மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது ஆட்சி செய்பவர்கள் மீது இல்லை.

தமிழக மக்களுக்கு மக்கள் பணி செய்யவும், ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றவும், கழகத்தையும் ஆட்சியையும் வழிநடத்த சசிகலா, டி.டி.வி. தினகரனால் மட்டுமே முடியும்.

தமிழக மக்கள் பயன்பெற, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்திட ஆட்சி மாற்றம் தேவை. எனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மாற்றி சசிகலா, டி.டி.வி. தினகரன் தலைமையில் கட்சி மற்றும் ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் கட்சி இராணுவ கட்டுக்கோப்போடு செயல்படும்" என்று அவர் பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் கனகவேலாயுதம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வக்கீல் சம்பத்குமார், மாவட்ட இணைச்செயலாளர்கள் செல்வி சின்னதுரை, சுசிலா ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் திருமணி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.