தான் கடத்தப்பட்டது பற்றியும் மற்றும் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டுள்ளது பற்றியும் புகார் அளிக்க கமிஷனரை சந்தித்தபோது, அவர் புகாரை வாங்க மறுத்து விட்டார் என்று ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் பரபரப்பு குற்றசாட்டை கூறினார்.

ஓ.பி.எஸ் அணிக்கு வந்துள்ள முன்னால் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏவுமான சண்முகநாதன் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் தான் கடத்தி வைக்கப்பட்டது, தன்னை மிரட்டி வந்த்தது, தான் தப்பி வந்தது, தன்னைப்போலவே பல எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டிருப்பது பற்றி புகார் அளித்துள்ளதாக கூறினார்.

அப்படி புகார் அளிக்க சென்ற தம்மிடம் கமிஷனர் ஜார்ஜ் புகார் வாங்க மறுத்துவிட்டதாகவும் பின்னர் தாம் கூடுதல் ஆணையர் சங்கரை சந்தித்து புகார் அளித்ததாகவும் கூறினார்.

இதை தாங்கள் பதிவு செய்யுங்கள் என பத்திரிக்கையாளர்களை கேட்டுக்கொண்டார்.

கமிஷனர் ஜார்ஜ் ஏற்கனவே மாறிவரும் அரசியல் சூழ்நிலையை வைத்து சசிகலா தான் முதல்வராவார் என்று கணக்கு போட்டு கடந்த பத்து நாட்களாக கமிஷனர் என்ற முறையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்புக்கு செல்லவில்லை.

முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிடம் தியானத்தில் ஈடுபட்ட போதும் அந்த இடத்திக்கு வரவில்லை என்பதும் கட்சிக்காரர்களால் புகாராக கூறப்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது.

இதேபோன்று எம்.எல்.ஏக்களை கூவத்தூர் அழைத்து சென்ற போது என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக தான் கமிஷ்னரை தொடர்பு கொண்ட போது அவர் இணைப்புக்கு வரவில்லை என கவர்னரிடம் ஓ.பி.எஸ் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு நடந்து கொள்ளும் கமிஷனரை மாற்ற வேண்டும் என்று ஓ.பி.எஸ் கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தற்போது கமிஷனர் ஜார்ஜ் குறித்து சண்முகநாதன் கூறியுள்ள குற்றசாட்டு மேலும் அவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.