தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு யுவபுரஸ்கார்விருதும், கிருங்கை சேதுபதி உள்பட 21 எழுத்தாளர்களுக்குப் பால் சாகித்ய புரஸ்கார் விருதையும் டெல்லி சாகித்ய அகாடெமி இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில்  ஒவ்வொரு ஆண்டும் படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், சாகித்ய அகாடெமி மாநில, தேசிய அளவிலான எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதும், யுவபுரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 23 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய விருதுகளும் 21 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அம்பு படுக்கை என்ற சிறுகதையை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போன்று குழந்தைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுகளைப் பொருத்தவரை, தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது. பால புரஸ்கார் விருதுகள், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது வழங்கும்தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்ற தமழக எழுத்தாளர்களுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.