எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசிய போது திடீரென ஒலிபெருக்கி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓடினர். தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி  மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் எஸ்.வி.சேகர் மைக்கில் மாணவர்கள் இடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடை அருகே இருந்த ஒலி பெருக்கி சாதனம் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதை பார்த்த எஸ்.வி.சேகர் உள்பட மேடை அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மேடையில் இருந்தவர்களும், மாணவ, மாணவிகளும் அலறியடித்து கொண்டு மேடையில் இருந்து குதித்து ஓடினர். அப்பகுதியில் சிறிது நேரம் கரும்புகை சூழ்ந்தது. உடனே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

முன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் தளத்தில் பெண் நிருபர்கள் பற்றி அவதூறு கருத்தை வெளியிட்டார். அதில் வரிக்கு வரி கொச்சையான வார்த்தைகளால் பெண் பத்திரிக்கையாளர்களை ஆபாச அர்ச்சனை செய்யும் அந்தப் பதிவு ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் பதிவை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டதோடு, அந்தப் பதிவையும் தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருப்பினும் அவரது வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் தாம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் தலைமறைவாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.