புழல் அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்து, வீட்டுமனையாக மாற்றினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார் அனுப்பினர். அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி தாசில்தார் புகழேந்தி மேற்பார்வையில், செங்குன்றம் மண்டல துணை வட்டாட்சியர் பாலாஜி, செங்குன்றம் வருவாய் ஆய்வாளர் ஜெய்கர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து அகை்கப்பட்ட எல்லை கற்கள் மற்றும் சுவரை அகற்றி அரசு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு ₹5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை யாராவது ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.