கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி அணையில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷெட்டர் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. 

கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷெட்டர் கடந்தாண்டு நவம்பர் மாதம் உடைந்ததால் ரூ.30 இலட்சத்தில் 12 அடி உயரத்திற்கு தற்காலிக ஷெட்டர் அமைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து புதிய ஷெட்டர் அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்காக கடந்த 8-ஆம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் பழைய ஷெட்டரை அகற்றும் பணி நடைப்பெற்றது.

அப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததால் அதனைத் தொடர்ந்து 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷெட்டர் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. 

இதற்காக முதல் மதகில் இரு பக்கவாட்டிலும் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்றது. அந்தப் பகுதிகளில் தகடுகள் பொருத்தப்பட்டு மதகு அமைக்கும் பணிகள் தொடங்கியது. 

ஆறரை அடி உயரத்திற்கு மதகு பொருத்தப்பட்டு எரிவாயு வெல்டிங் மூலமாக இணைக்கும் பணி நடந்தது. இந்தப் பணிகள் இன்னும் 15 நாட்களில் முழுமையடையும் என்பது குறிப்பிடத்தக்கது.