முன் விரோத தகராறில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், வாலிபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் அங்குச்சாமி (எ) ஈஸ்வரன் (48). லாரி டிரைவர். பிரபல ரவுடி. இவர் மீது ஏற்கனவே கொலை உள்பட பல்வேறு வழக்குகள்  பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை அங்குசாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடினர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் சங்கரப்பேரியில் இருந்து பண்டாரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தவர், அங்குசாமி என தெரிந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், அங்குசாமி வீட்டின் அருகில் வசிப்பவர் முனியசாமி (53). லாரி டிரைவர். இவரது மகன்கள் மாரிராஜ் (32), கனிராஜ் (30), வேல்ராஜ் (25). கடந்த3 மாதத்துக்கு முன் முனியசாமி, மது அருந்திவிட்டு போதையில் அங்குசாமி வீட்டின் அருகில் படுத்து கிடந்தார்.

இதை பார்த்த அங்குசாமி, அவரை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன் விரோதமாக மாறியது. இதையொட்டி அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

இதைதொடர்ந்து நேற்று மதியம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த முனியசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது மகன்கள் மாரிராஜ், கனிராஜ், வேல்ராஜ் ஆகியோர் நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது, அங்குசாமியை மறித்து வெட்டி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதைதொடர்ந்து 3 பேரையும் தனிப்படை அமைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.