கைதாகி ஜாமீனில் விடுதலையான சென்னை ரவுடி பினு தலைமறைவாகியுள்ளார். மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் 10 மணிக்கு கையெழுத்திட நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் நிபந்தனைப்படி காவல்நிலையத்தில் கையெழுத்திடாமல் ரவுடி பினு தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி 6-ம் தேதி ரவுடி பினு பூந்தமல்லியில் உள்ள லாரி ஷெட்டில் பிறந்தநாள் கொண்டாடினார்.  அவர் அரிவாளை கொண்டு கேக்கை  வெட்டினார். இதில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர். இதில் தனக்கு போட்டியாக உள்ள மற்றொரு ரவுடி ராதாகிருஷ்ணனை கொலை செய்ய ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டார்.இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிகளை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். 
குடிபோதையில் இருந்ததால் 75 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். இதில் பினு உள்ளிட்ட முக்கிய 3 ரவுடிகள் தப்பினர். இந்நிலையில் தனிப்படை அமைத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த பினு அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமீன் வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். கடந்த ஜூன்23-ம் தேதி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. அன்று முதல் தினமும் மாங்காடு காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என பினுவுக்கு உத்தரவு ஆணைபிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜூன் 23-ம் தேதிக்கு பிறகு  கையெழுத்திட காவல் நிலையத்துக்கு வரவில்லை. இதனால் அவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.