கூடலூர்,
கூடலூர் வழியாக கர்நாடகாவிற்கு பாறை பொடிகள் கொண்டு செல்வது போன்று மணல் கடத்திச் சென்ற இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் வழியாக கேரளா பதிவு எண்கள் கொண்ட 2 கனரக லாரிகள் சந்தேகப்படும்படியாக கர்நாடகாவிற்குச் சென்றுக் கொண்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி தாசில்தார் அப்துல்ரகுமான் தலைமையிலான வருவாய்த்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கூடலூர் – மைசூர் செல்லும் சாலையில் தொரப்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாறை பொடிகளை ஏற்றி கொண்டு கர்நாடகாவிற்குச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். பாறை பொடிகள் கொண்டு செல்வதற்காக ஆவணங்களை வாங்கி வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக குண்டல்பேட் மற்றும் மைசூருக்கு செல்வதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கேரளா மாநிலம் வழிக்கடவில் இருந்து நாடுகாணி, கூடலூர் வழியாக கர்நாடகாவிற்கு கனரக லாரிகள் சென்றது.
இதைத் தொடர்ந்து உரிமம் பெற்ற சாலை வழியாக செல்லாமல் கூடலூர் வழியாக பாறை பொடிகளை ஏற்றிச் செல்வதாக 2 லாரிகளையும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த லாரிகளின் பின்னால் தார்பாலின் தாள்கள் கொண்டு மூடப்பட்டு இருந்ததை அகற்றினர். அப்போது லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு அதன் மீது பாறைபொடிகள் தூவப்பட்டு இருந்தது.
கேரளாவில் இருந்து திருட்டுத்தனமாக மணலை அள்ளி சோதனைச் சாவடிகளில் சந்தேகம் வராமல் இருக்க அதன் மீது பாறை பொடிகளை தூவி கர்நாடகாவுக்கு நூதனமுறையில் கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
மேலும் விதிமுறைகளை மீறி பல டன் மணல் கொண்டு செல்லப்படுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 2 லாரிகளும் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, “பாறை பொடிகள் ஏற்றி செல்வதாக கூறி மணல் கடத்த முயன்ற கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
