road cut down due to flood in krishnagiri
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, நாட்ராம்பாளையம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதையொட்டி வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை வினாடிக்கு 950 கனஅடி தண்ணீர் வந்தது.
மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,100 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஐந்தருவி பகுதியில் ஒரு சில அருவிகளில் மட்டுமே தண்ணீர் கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1056 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1021 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 20.08 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 20.20 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை தீவிரம் அடைந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியில் தேன்கனிக்கோட்டை சுற்றுபுறம் நேற்று இரவு பெய்த கனத்த மழையில், அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வந்த பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அதேபோல், அப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்துவற்கு, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சாலையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும், அஞ்செட்டி பகுதியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலில் துவண்டு வந்த மக்கள், திடீரென பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இதில் சில வீடுகள் இடிந்து சேதமானதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அதுகுறித்த முழு தகவல் வரவில்லை.
