ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கோவிலுக்கு நெல்லையில் வசிக்கும் சென்னை மக்கள் வழங்கிய 75 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளாது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையார்புரம் என்ற கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, அந்த ஊரில் வசிக்கும் சென்னை வாழ் மக்கள் சார்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு ஐம்பொன் அம்மன் சிலை ஒன்று கொடுக்கப்பட்டது. சுமார் 75 கிலோ எடை கொண்ட அந்த ஐம்பொன் சிலை, கோவிலின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த சிலையில் 5 கிராம் தங்கத்தாலி, 50 கிராம் வெள்ளிக் கொடி ஆகியவையும் அணிவிக்கப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் இரவில் வழிபாடுகளை முடித்துவிட்டு கோவில் பூசாரியான குறிப்பன்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் கோவிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலையில் கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே பார்த்தபோது, கோவிலில் இருந்து ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு போனது தெரியவந்தது.

இதுபற்றி கோவில் நிர்வாகியான அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு (41) தகவல் தெரிவித்தனர். அவரும், பூசாரி மணிகண்டனும் உடனடியாக கோவிலுக்கு வந்து பார்த்தனர்.
பின்னர், சிலை திருட்டு போனது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலாலர்கள் விசாரணை நடத்தினர்.

‘டைகர்‘ என்ற காவல் மோப்ப நாய், கோவிலில் மோப்பம் பிடித்துவிட்டு ஊரில் சில தெருக்களின் வழியாக ஓடி கடைசியில் அங்குள்ள ஊர் கிணற்றை மோப்ப நாய் சுற்றிச் சுற்றி வந்தது.

இதையடுத்து காவலாளர்கள் கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்தனர்.

தண்ணீர் முழுவதையும் இறைத்துப் பார்த்த போது, கிணற்றுக்குள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

கோவில் அமைந்துள்ள பகுதியில் ஒரு வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை காவலாளர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் ஐம்பொன் அம்மன் சிலையை தூக்கிச் சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு போனது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.