நாட்டின் 68 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ஓபிஎஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார், உயிர் நீத்த முப்படைவீரர்களுக்கும் மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்களுக்கு விருது வழங்கி, முதலமைச்சா் திரு. ஓ. பன்னீா்செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

பின்னா், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, விழா இனிதே முடிந்தது.

விழாவையொட்டி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை மற்றும் சுவாமி விவேகானந்தா சாலை வழியாக கடற்கரை சாலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தன. 

கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் அதனை தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் தடியடி, கலவரம் ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து மக்கள் வெளியே வராததால் குடியரசு தினம் கடந்த ஆண்டுகள் போலில்லாமல் களையிழந்து காணப்படுகிறது. மக்களும் பெருந்திரளாக இல்லாமல் சொற்பமானவர்களே பங்கேற்றனர்.