Refusal to treat the patient without having the card in government hospital

தமிழக அரசின் காப்பீடு அட்டை இல்லாததால், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மறுக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு பின் கலெக்டர், டீன் உத்தரவு படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையின் அவலத்தை கண்டு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாலு (42). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இவர்களுக்கு ரோகித் (13), தருண் (12) ஆகிய மகன்கள் உள்ளனர். இருவரையும் பாலு பராமரித்து வருகிறார். இருவரும் சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி படிக்கிறார்கள்.

கடந்த 8ம் தேதி பாலு, வீட்டில் இருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. இதுபற்றி அவரது மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற மகன்கள், நடக்க முடியாமல் தவித்த தந்தையை, ஆட்டோ மூலம் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளனர். பின்னர், அவரை வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். எலும்பு முறிவு ஏற்பட்ட பாலுவை உள்நோயாளியாக சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் சிறுவர்கள் 2 பேரும் தவித்தனர். பின்னர், அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கான காத்திருப்பு அறைக்கு சென்றனர். அங்கேயே கடந்த 4 நாட்களாக பாலு மகன்களுடன் தங்கினார்.

டாக்டர்கள், அவருக்கு தமிழக அரசின் காப்பீடு திட்டம் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர். ஆனால் பாலு, காப்பீடு திட்ட அட்டை இல்லாமலும், சிகிச்சை பெற முடியாமலும் தவித்தார்.

இதற்கிடையில், மருத்துவமனை வளாகத்தில் மருந்து சீட்டுடன் சுற்றி வந்த 2 சிறுவர்களிடம், அங்கிருந்த சிலர் விசாரித்தனர். அப்போது, நடந்த சம்பவம் குறித்து, சிறுவர்கள் கூறி அழுதுள்ளனர்.

எத்தனையோ நோயாளிகளை தான் ஓட்டும் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி தனது தந்தையை, அரசு மருத்துவமனையிலு உள் நோயாளியாக சேர்க்க மறுக்கிறார்கள் என சிறுவர்கள் கூறியதை கேட்டதும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சம்பத், அரசு மருத்துவமனை டீன் கனகராஜ் ஆகியோருக்கு சமூக ஆர்வலர்கள் புகாராக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உத்தரவின்பேரில் பாலு, சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.