தேனி

தேனியில் மூடப்பட்ட அரசு சாராயக் கடைகள் மற்றும் தனியார் சாராய பார்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் அரசின் மீது மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் 98 சாராயக் கடைகளும், 19 தனியார் சாராய பார்களும் செயல்பட்டு வந்தன.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாவட்டத்தில் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 77 அரசு சாராயக் கடைகள் மற்றும் 15 தனியார் சாராய பார்கள் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன.

மூடப்பட்ட அரசு சாராயக் கடைகளை மாற்று இடங்களில் திறக்க அரசு மிகவும் தீவிரம் காட்டியது. பல்வேறு இடங்களில் புதிது புதிதாக சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் சாராயக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த எதிர்பையும் மீறி மூடப்பட்ட 77-ல், 62 சாராயக் கடைகள் மாற்று இடங்களில் திறக்கப்பட்ட நிலையில் தனியார் சாராய பார்கள் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட இடங்களில் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் சாராயக் கடைகள் செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் 15 இடங்களில் மூடப்பட்டிருந்த தனியார் மனமகிழ்மன்றம், தங்கும் விடுதி மற்றும் உணவங்களுடன் இணைந்த சாராய பார்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மூடப்பட்ட நெடுஞ்சாலையோர அரசு சாராயக் கடைகள், இடமாற்றம் செய்யப்பட்டிருந்த சாராயக் கடைகள், மீண்டும் நகர எல்லைக்கு உள்பட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் மீண்டும் சாராயக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, சாராயக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கிராமப் பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அவை அரசால் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

மேலும், மக்களுக்கு சாராயக் கடைக்கு எதிராக போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், அனைத்து சாராயக் கடைகளும் திறக்கும் அரசின் இந்த செயல் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.