Asianet News TamilAsianet News Tamil

காவிரி ஆணைய உத்தரவால் பயனில்லை... அணைகளை கையாளும் அதிகாரம் கோரி சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக- ராமதாஸ்

காவிரி சிக்கலின் அடிப்படையை அறியாமல் சட்டப்பேரவையில் பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss request to pass a resolution demanding the formation of a Cauvery Management Authority with powers to deal with dams KAK
Author
First Published Oct 8, 2023, 12:46 PM IST

தமிழ்நாட்டில் குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அண்மைக்கால ஆணை என்பது, அக்டோபர் 15ஆம் நாள் வரை காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது தான்.

தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதித்து காவிரி ஆணையத் தீர்ப்பை கர்நாடக அரசு நாளை மறுநாள் முதல் செயல்படுத்துவதாக  வைத்துக் கொண்டாலும், அதன்பயனாக தமிழகத்திற்கு ஒரு நாளை 0.25 டி.எம்.சி வீதம் 6 நாட்களுக்கு 1.50 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதைக் கொண்டு எதையும் செய்ய முடியாது. காவிரி சிக்கலில் தீர்மானம் நிறைவேற்றியதாக பெருமை பேசவே பயன்படும்.

Ramadoss request to pass a resolution demanding the formation of a Cauvery Management Authority with powers to deal with dams KAK

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும் முடிவுக்கு தமிழக அரசு எவ்வாறு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. காவிரி சிக்கல் தொடர்பாக கடந்த இரு மாதங்களாக வந்த செய்திகளைப் பார்த்தால் காவிரி ஆணையம் தமிழகத்துக்கு எந்த அளவில் துரோகங்களை செய்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்திய போது, கர்நாடக அணைகளில் 80 டி.எம்.சி தண்ணீர் இருந்தாலும் கூட, வினாடிக்கு 10,000 கனஅடி திறக்க ஆணையம் ஆணையிட்டது. இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

Ramadoss request to pass a resolution demanding the formation of a Cauvery Management Authority with powers to deal with dams KAK

பின்னர் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை 5000 கன அடியாக குறைக்க ஆணையம் ஆணையிட்டது. ஒரு கட்டத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழகம்  கோரிய போது 3000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க ஆணையிட்டது. இப்படியாக காவிரி ஆணையம் பிறப்பித்த ஒவ்வொரு ஆணையும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரானது தான். காவிரி ஆணையம் அதன் பணிகளை செய்யவில்லை; மெத்தனமாக உள்ளது என்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர்  துரைமுருகன் அவர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு மாநில அமைச்சரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுவது நகைப்புக்கிடமானதாகவே அமையும். இதை அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று 2 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகுவதற்கு காரணமே காவிரி ஆணையமும், அதன் அதிகாரமற்ற தன்மையும் தான். ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் கிட்டத்தக்கட்ட 100 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. அப்போது தமிழக அரசு கோரியவாறு வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டிருந்தால், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்காது. தண்ணீர் இல்லாமல் மேட்டூர் அணை மூடப்படவிருக்கும் இன்றைய நிலையில் கூட, கர்நாடக அணைகளில் 67 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதிலிருந்து குறைந்தது 20 டி.எம்.சி  நீரை திறப்பதற்கு ஆணையம் உத்தரவிட்டால் இப்போதும் கூட குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

Ramadoss request to pass a resolution demanding the formation of a Cauvery Management Authority with powers to deal with dams KAK

ஆனால், அந்த நடவடிக்கையை எடுக்க காவிரி ஆணையம்  தயாராக இல்லை. ஒருவேளை காவிரி ஆணையம் ஆணையிட்டாலும், அதை செயல்படுத்த கர்நாடக அரசு முன்வராது. இந்த சூழலை மாற்றாத வரை காவிரி பாசன மாவட்டங்களில் கண்ணீர் சூழல் மாறாது. அதேநேரத்தில் இந்த சூழல் மாற்ற முடியாதது அல்ல. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத்திற்கு வழங்குவது தான் அதற்கான தீர்வு ஆகும். அத்தகைய அதிகாரம் ஆணையத்திற்கு வழங்கப்பட்டால்,  தமிழகத்திற்கான தண்ணீரை ஆணையமே திறந்து விட முடியும்; அதை கர்நாடகத்தால் தடுக்க முடியாது.

 அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தால் பயனில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்ட நிலையில், அதை மாற்றி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய  காவிரி ஆணையம் அமைப்பது தான் சரியான தீர்வாகும். அதற்கான முயற்சிகளை தமிழகம் தொடங்க வேண்டும். அதன் தொடக்கமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவாறு அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து அதற்கான அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நாளை நிறுத்தம்

Follow Us:
Download App:
  • android
  • ios