Rajini as Trapik Ramasamy Shankar Shock Info
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் படம் இயக்க இருந்ததாகவும் அதில் ரஜினிகாந்தை நடிக்கவைக்க எண்ணியதாகவும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

எஸ். ஏ .சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், வைரமுத்து உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஷங்கர், “டிராபிக் ராமசாமி ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். அவர் ஒரு கத்தி இல்லாத ‘இந்தியன்’. வயதான ‘அம்பி’. அவரது கதையை திரைப்படமாக எடுக்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன். விரைவில் திரைக்கதையை முடித்துவிட்டு அவரை சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாய் அவரது கதாபாத்திரத்தில் ரஜினி சாரை நடிக்க வைக்க நினைத்தேன்.

அப்போது அவரது கதை படமாகிறது என்பது தெரியவந்ததும் ‘வடை போச்சே’ என்றாகிவிட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சமுதாய அவலங்கள் மேல் எப்போதும் கோபம் கொண்ட மனிதர் அவர். அவரிடம் இருந்துதான் எனக்கு கொஞ்சம் அந்த உணர்வு ஒட்டிக்கொண்டுவிட்டது. எஸ்.ஏ.சி சார் திரையில் வரும்போது அருமையாக உள்ளது. விரைவில் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என ஆவலாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகருடன் பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
நேற்று பாடல்கள் வெளியான நிலையில் படம் ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
